விசாகப்பட்டினம்: இந்தியா திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் முடங்கிய இந்திய மாணவர்கள் 200 பேர் நேற்று முன்தினம் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
இம்மாணவர்கள் பிலிப்பீன்சில் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா கிருமி அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் நாடு திரும்ப முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்களை பிலிப்பீன்சுக்கு அனுப்பி வைத்த கல்விச் சேவை நிறுவனம் செய்தது.
அதன்படி, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கோலாலம்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இந்தியா செல்வது என முடிவானது.
மார்ச் 17ஆம் தேதி காலை இரு குழுக்களாக மாணவர்கள் கோலாலம்பூர் சென்றடைந்தனர். ஆனால் அங்கிருந்து இந்தியா செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட தகவலறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தங்களை அழைத்துச் செல்ல இந்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்ப வேண்டும் என மாணவர்கள் சமூக வலைத் தளங்கள் வழி வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் 18ஆம் தேதி மாலை இரு விமானங்களில் மாணவர்கள் விசாகப்பட்டினத்துக்கும், டெல்லிக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருந்தது.
தாயகம் திரும்பிய மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இல்லை என உறுதியான பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

