கொரோனா கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும்விதமாக இந்தியாவில் `தேசிய பேரிடர்' நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக பக்தர்களின் நலன் கருதி இன்று 20.3.2020 காலை 8 மணி முதல் இம்மாத இறுதி வரை முக்கிய திருக்கோயில்களில் பக்தர்களின் தரிசன அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
அனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு வழிபாடுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், பழநி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவாரூர் ஆரூரான் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் உட்பட தமிழகத்தின் பல முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தினமும் அதிக பக்தர்கள் கூடக்கூடிய இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 562 முக்கிய திருக்கோயில்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#தமிழகம் #திருமலை #கோயில்


