22ஆம் தேதி வீட்டிலேயே இருக்க மக்களிடம் இந்திய பிரதமர் வேண்டுகோள்

22ஆம் தேதி வீட்டிலேயே இருக்க மக்களிடம் இந்திய பிரதமர் வேண்டுகோள்

2 mins read
489b8db6-5ee8-4ec9-b853-d091c56e4ee7
காய்ச்சலால் அவதிப்படும் ஒருவரை கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். படம்: இபிஏ -

இந்தியாவில் கிருமித்தொற்றால் 200க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆயினும், சமூகப் பரவல் எனும் மக்களுக்கிடையே பரவும் நிலை இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் மக்களவையில் தெரிவித்தார்.

கொரோனா கிருமி பரவலில் தற்போது 2ஆம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதிவரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால், போன்றவற்றையும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

அப்போது, கொரோனா கிருமியை பொதுமக்கள் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதுடன் பொதுமக்கள் முடிந்த வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், "வரும் 22 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். 22ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்," என்றார்.

"மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றவர்களுக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். 22ந்தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிரூபிப்போம்," என்றும் அவர் கூறினார்.

அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை யாரும் வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று கூறிய அவர், அது மற்றவர்களைப் பாதிக்கும் என்றார்.

#இந்தியா கொரோனா

குறிப்புச் சொற்கள்