மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியூர் மற்றும் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகள் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் ஒருவருக்கு பின் ஒருவர் இடித்துக்கொண்டும், முந்திக்கொண்டும் டிக்கெட்டுகளை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பயணிகள் நெரிசலில் ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலம் கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை முதல் எல்லா ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பயணிகள் ஒரு மீட்டர் அல்லது மூன்றடி இடைவெளியில் ஒருவருக்குப் பின் ஒருவர் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் அவர்கள் சரியான இடைவெளியில் நிற்பதற்கு வசதியாக ரயில்வே பாதுகாப்புப்படை போலிசார் மூன்றடி இடைவெளியில் கோடு போட்டு அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்தக் கோட்டில்தான் பயணிகள் நிற்கவேண்டும் எனவும் ஒருவருக்கொருவர் தொடும் தூரத்தில் நிற்கக்கூடாது எனவும் ரயில்வே பாதுகாப்புப் படை போலிசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மும்பை தாதர், சிஎஸ்எம்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டனர்.

