புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று உலகெங்கும் பரவியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் வெளியுறவு அமைச்சு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் சிக்கித் தவித்த 263 இந்திய மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று புதுடெல்லி வந்தடைந்தனர். தங்களைப் பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா கிருமித் தொற்று காரணமாக உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கிருமித் தொற்று காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் உயர்கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். தங்களை உடனடியாக சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும் எனப் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 200 மாணவர்கள், பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து மலேசியா வழியாக இந்தியா செல்வதற்கு முயன்றனர். ஆனால் கோலாலம்பூர் வந்தடைந்தபோது இந்தியாவுக்கான விமானங்கள் ரத்தாகியதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இந்திய அரசு இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை மீட்டது. இந்நிலையில் இத்தாலியில் தவித்து வந்த 263 இந்திய மாணவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் பலனாக ரோம் நகருக்கு ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அங்கிருந்த 263 இந்திய மாணவர்கள் நேற்று பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்.
நாடு திரும்பியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் டெல்லியில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே மலேசியாவில் கல்வி பயின்று வந்த சுமார் 200 இந்திய மாணவர்கள் தங்களையும் சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும் என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

