புதுடெல்லி: பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என பெரும்பாலான மாநிலங்கள் அறிவித்துள்ளன. அத்தகையவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 23 மாநிலங்களைச் சேர்ந்த 80 மாவட்டங்களில் மார்ச் 31ஆம் தேதி வரை பொது நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம், அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 188ன் கீழ் ஆறு மாத சிறைத் தண்டனைக்கும் வாய்ப்புண்டு. அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தடைக் காலத்தில் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடுவது குற்றமாகக் கருதப்படும். நேற்று முன்தினம் சுய ஊரடங்கு உத்தரவை மீறிய பலரும் பல்வேறு மாநிலங்களில் கைதாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் கொரோனா கிருமித் தொற்று குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்பிய மற்றும் பொது நடமாட்ட கட்டுப்பாட்டை மீறிய 29 பேரை அம்மாநில அரசு கைது செய்துள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தீவிரமாக அறிவுறுத்தி இருப்பதையடுத்து,
இத்தகைய கைது நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா கிருமித் தொற்றின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். மேலும் வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தாரைக் காப்பாற்றமுடியும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். "கொரோனா கிருமித் தொற்றின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தருகிறது. மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைக் கூட பலர் தீவிரமாக கடைப்பிடிக்கவில்லை.
"கொரோனா கிருமித் தொற்று மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிக கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கள் மருத்துவ விதிமுறைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

