இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

2 mins read
f5bcc585-6ce9-4d9c-9625-d5c9d35e8b05
இந்தியாவில் 21 நாட்களுக்கு நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதைக் கேட்டு பால், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களை வாங்க நேற்றிரவு புதுடெல்லியின் கடைகளில் குவிந்த மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

உலகையே உலுக்கி வரும் கொரோனா கிருமித்தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நேற்று(மார்ச் 24) நள்ளிரவு முதல் அது நடப்புக்கு வந்துள்ளது. நேற்றிரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்த கிருமித் தாக்குதலுக்கு 519 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார, குடும்ப நல அமைச்சின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது. கிருமித் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றார். அதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவின் மூலம் அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டாலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை இணையம் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.

பெட்ரோல் நிலையங்கள், எரிவாயு முகவைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், எடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட்டாலும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.

அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும்; ஆனால், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

மற்றவர்களுடனான தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிப்ரவரி 15-க்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறையின் அறிவுரைகளை மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#இந்தியா #ஊரடங்கு #கொரோனா

குறிப்புச் சொற்கள்