கொவிட்-19: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு

கொரோனா கிருமித்தொற்றுக்காக  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 25) அதிகாலை  உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை முதலே சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று நேற்றிரவு வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த நோயாளிக்கு நாட்பட்ட நுரையீரல் நோய், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் 15 பேருக்கு கிருமித்தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்த முதல் நபர் இவர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

#கொவிட்-19 #கொரோனா #மதுரை #தமிழ்நாடு