கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் சுய ஊரடங்கில் முடங்கிக் கிடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்தக் குழந்தை கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்னும் கிராமத்தில் பிறந்தது.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றுவரும் கிருமியின் பெயரை அந்தக் குழந்தைக்குச் சூட்டியவர் அவரது மாமா நிதேஷ் திரிபாதி. குழந்தையை ஈன்றெடுத்த தாயான ராகினி திரிபாதியின் சம்மதத்தோடு கொரோனா பெயர் சூட்டப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அதற்கான காரணத்தையும் நிதேஷ் விளக்கினார்.
"கொரோனா கிருமி ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு இந்தக் கிருமி காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்துப் போராடுபவளாக இருப்பார்," என்றார்.
கொரோனா என பெயரிடப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதால் உத்தரப் பிரதேசத்தைக் கடந்து இந்திய அளவில் அந்தப் பெண் குழந்தை பிரபலமடைந்து வருகிறது.

