புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாகிருமி காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 760ஆக உயர்ந்துள்ளது என்று மாநிலங்களைச் சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சுமார் 48 பேர் வெளிநாட்டினர்.
அதேவேளையில், கொரோனா கிருமி பாதிப்புக்கு 20 பேர் மாண்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை மட்டும் நாட்டின் பல பகுதிகளில் 7 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கிருமி பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 43லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 சுமார் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி வருகிறது என்றாலும் அது இன்னமும் சமூகத் தொற்று நிலைக்கு வரவில்லை என்று மத்திய அரசு நேற்று உறுதிபட தெரிவித்தது.
அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும் மகாராஷ்டிராவில் 130 பேரும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 மாநிலங்களில் கொரோனா கிருமி பாதிப்புக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே மருத்துவமனைகள் கட்டும் பணி தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா ஏற்படுத்தி வரும் மிரட்டலையும் பாதிப்புகளையும் அச்சம் கலந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்குரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவத்தைக் களமிறக்க மத்திய அரசு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் வியாழக்கிழமை நடந்தது.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியாவுக்கு அன்றாடம் ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக 'கேர் ரேட்டிங்ஸ்' என்ற நிறுவனம் கணக்கிட்டு தெரிவித்து உள்ளது.
நாட்டில் 21 நாள் முடக்கத்தின் காரணமாக, 80% உற்பத்தி இழப்பு ஏற்படும் எனில், நாட்டின் பொருளியலில் ஏற்படக்கூடிய மொத்த இழப்பு 6.3 முதல் 7.2 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த மதிப்பீடு, நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான 140 முதல் 150 லட்சம் கோடி ரூபாய் என்ற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம், முடக்கம் 30 அல்லது 60 நாட்கள் வரைகூட நீடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய கவலை வேலை வாய்ப்பின்மைதான் என்றும் அது கூறியுள்ளது.

