கொவிட்-19: தாய் இறந்த செய்தி அறிந்தும் பணியைத் தொடர்ந்த துப்புரவு அதிகாரி; இறுதிச்சடங்கை முடித்து உடனே பணிக்குத் திரும்பினார்

கொவிட்-19: தாய் இறந்த செய்தி அறிந்தும் பணியைத் தொடர்ந்த துப்புரவு அதிகாரி; இறுதிச்சடங்கை முடித்து உடனே பணிக்குத் திரும்பினார்

2 mins read
278b076f-541f-40dd-bbd3-d1a7c490844d
மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி என்பவர் போபால் மாநகராட்சிக்கான துப்புரவுப் பொறுப்பாளராக பணியாற்றுகிறார். படம்: தகவல் ஊடகம் -

தன் தாய் இறந்த செய்தி கேட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிரான தமது பணியை தொடர்ந்து செய்த சுகாதார அதிகாரியின் கடமை உணர்ச்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை; மதிய உணவு இடைவேளையில் தாயாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு திரும்பிவந்து மீண்டும் பணியைத் தொடர்ந்துள்ளார் அந்த மன உறுதிபடைத்த மகன்.

இந்தியாவில் இன்று (மார்ச் 28) காலை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873ஆக இருந்தது. அதில் 78 பேர் குணமடைந்துள்ள நிலையில் 776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு, வீடுகளுக்குச் சென்று கிருமிநாசினி தெளித்தல் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பல ஊழியர்கள் நேரம் கருதாமல் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி என்பவர் போபால் மாநகராட்சிக்கான துப்புரவுப் பொறுப்பாளராக பணியாற்றுகிறார்.

இவர் போபால் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இருக்கும் போது அவரது தாயார் மறைந்துவிட்ட துக்கச் செய்தி அவருக்குக் கிடைத்தது.

சோகம் தன்னை சூழ்ந்திருந்தாலும் தான் செய்து கொண்டிருந்த பணியை பாதியில் விடாமல் தொடர்ந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஷ்ரஃப் அலி, "தாயைவிட உயர்ந்தது எதுவுமில்லை. ஆனால் தாய்க்கு அடுத்தது தாய் நாடு.

"காலை 8 மணியளவில் எனது தாயின் மரணம் குறித்து நான் அறிந்தேன். ஆனால் என் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை இருந்தது. கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பலரின் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்குக் கொடியது என்பதை நான் அறிவேன்.

"இந்த நிலையில் என்னுடைய பணியை பாதியில் நிறுத்திவிட்டுச் செல்ல மனமில்லை. தாயின் இறுதிச் சடங்கிற்காக மதியம் சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்கு வந்துவிட்டேன்," என தெரிவித்தார்.

அஷ்ரஃப் அலியின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

#இந்தியா #போபால் #கொரோனா

குறிப்புச் சொற்கள்