கொவிட்-19: கேரளாவில் முதல் உயிரிழப்பு, தமிழகத்தில் மேலும் இருவருக்கு தொற்று

கொவிட்-19: கேரளாவில் முதல் உயிரிழப்பு, தமிழகத்தில் மேலும் இருவருக்கு தொற்று

2 mins read
8fbc03e9-472f-47d4-8b6e-e965852edd67
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கும் வேளையில், சென்னை தெருக்களில் காணப்பட்டவர்களிடம் கொரோனா கிருமி போன்ற தோற்றமுடைய தலைக்கவசம் அணிந்த காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாபு வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் அங்கு 21 நாட்களுக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து விமானச் சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் போன்றோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று (மார்ச் 28) காலை 9.30 மணி நிலவரப்படி அங்கு 873 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 (அதிகாரபூர்வ தகவல்) ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அங்கு 19 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரொனாவால் கேரளாவில் 170க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த நபருக்கு வயது 69. அவர் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது நபர், மேற்கிந்திய தீவுகளில் இருந்து வந்த பின்னர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல் பிரிட்டனில் இருந்து வந்த காட்பாடியைச் சேர்ந்த 49 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#இந்திய #கேரளா #தமிழகம் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்