புதுடெல்லி: இந்தியாவில் வெள்ளிக்கிழமை புதிதாக 149 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்களையும் சேர்த்து நாட்டில் மொத்தம் 873 பேரை அந்தக் கிருமி பாதித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களில் 78 பேர் குணமடைந்துவிட்டதாகவும் ஒருவர் அவருடைய நாட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக 20 பேர் பலியாகி இருப்பதாகவும் அது கூறியது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 177 பேருக்கும் கேரளாவில் 165 பேருக்கும் கிருமி பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் ஐவரும் குஜராத்தில் மூன்று பேரும் மரணமடைந்துவிட்டனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு பேரும் பீகார், பஞ்சாப் உள்ளிட்ட இதர மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாயினர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கேரளாவில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நேற்றுதான் அங்கு முதன்முதலாக 69 வயது முதியவர் ஒருவர் மாண்டார் என்றும் அவரையும் சேர்த்து நாட்டில் மொத்தம் 20 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குத் பலியாகி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இந்தியாவுக்கு கடந்த 2 மாதங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்துலகப் பயணிகள் வந்து உள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கைக்கும் கொரோனா கிருமி தொடர்பாக கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கும் கொரோனா கிருமித்தொற்று உறுதியான நிலையில் இந்த வேறுபாடு கவனிக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது என்றும் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தும்படியும் அந்தக் கடிதம் மாநிலங்களை வலியுறுத்தியது.
இதனிடையே, கொரோனா சமூகத் தொற்றாக பரிணமிக்கும் ஆபத்துள்ளதால் அதைச் சமாளிக்கும் விதத்தில் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

