புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகப் பொருளியல் மோசமாக பாதிக்கப்படும் சூழலில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020ல் முன்பு கணித்தபடி 5.3% அளவுக்கு வளராது என்று உலக அளவில் பிரபலமான ஓர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியப் பொருளியல் 2020ல் 2.5விழுக்காடுதான் வளரும் என மூடி என்ற (Moody) அந்த அமைப்பு கணித்து உள்ளது. "கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 21 நாள் முடக்கத்தை அமல்படுத்தி இருக்கின்றன. அந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளிலும் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது உண்மை.
"இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020ல் வளர்ச்சி 2.5%தான் இருக்கும். 2021ல் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8% அளவுக்கு அதிகரிக்கும்," என்று மூடி அமைப்பின் உலகப் பொருளியல் அட்டவணை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் வங்கிகளிலும் வங்கி சாரா நிதித்துறைகளிலும் போதிய பணப் பற்றாக்குறை காரணமாக கடனளிப்பு நிலவரம் ஏற்கெனவே கடுமையாகத் தடைபட்டு இருக்கிறது என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய பொருளியல் பாதிப்புகளைக் குறைக்க, இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தடாலடியாக நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், மூடி அமைப்பு இவ்வாறு கணித்து உள்ளது.
சந்தையில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வது, வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள நெருக்கடியைக் குறைப்பது, சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நடவடிக்கை ஆகியவை அந்த நான்கு அம்சங்கள்.

