(காணொளி உள்ளே) வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்மீது கிருமிநாசினி தெளிப்பு; சர்ச்சையைக் கிளப்பிய சம்பவம்

(காணொளி உள்ளே) வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்மீது கிருமிநாசினி தெளிப்பு; சர்ச்சையைக் கிளப்பிய சம்பவம்

2 mins read
a731233f-9174-4e1c-aec4-1a2a8fa8940d
காணொளியில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்திருக்க அவர்கள் மீது வேகமாக கிருமி நாசினி தெளிக்கப்படுவது பதிவாகியுள்ளது. படம், காணொளி: இணையம், பிரியங்கா காந்தியின் டுவிட்டர் பதிவு -

வெளிமாநிலங்களிலிருந்து நடந்து வந்த தொழிலாளர்கள் மீது உத்தரப்பிரதேசத்தில் கிருமிநாசினியைப் பீய்ச்சி அடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதும், வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முயற்சி செய்து வருகின்றனர்.

போக்குவரத்து வசதிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால், பலரும் குடும்பம் குடும்பமாக நடந்தே சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு செல்வோரால் கிருமிப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவி வருகிறது. நகரங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பத்தில் மூவர் கொரோனா கிருமிகளைச் சுமந்து செல்வதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பைய்ரெய்லி மாவட்டத்துக்குள் நுழைந்தவர்களை மாவட்ட எல்லையில் நிறுத்திய மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது கிருமி நாசினியை வேகமாகத் தெளித்தது.

சுவர்களில், பொருள்களில் அடிப்பதுபோல குழந்தைகள் உட்பட அனைவர் மீதும் கிருமிநாசினியை அடித்தது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அந்த சம்பவத்தைக் காட்டும் காணொளியில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் சாலையில் அமர்ந்திருக்க அவர்கள் மீது வேகமாக கிருமி நாசினி தெளிக்கப்படுவது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட நிர்வாகம், "குளோரின் கலந்த நீர்தான் அந்த மக்களின் மீது தெளிக்கப்பட்டது. அதில் வேறெந்த ரசாயனமும் சேர்க்கப்படவில்லை. நாங்கள், அவர்களது கண்களை மூடச் சொல்லிவிட்டோம். இதனை நாங்கள் மனிதத் தன்மையற்ற செயலாகக் கருதவில்லை. இது முக்கியமான ஒரு தடுப்பு நடவடிக்கை. அவர்களுக்கிடையே கிருமிப் பரவலைத் தடுக்க எடுத்த முயற்சி," என்று விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி, "நான் உத்தரப்பிரதேச அரசிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், நாம் அனைவரும் கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக இதுபோன்ற மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,"என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பின்னரும் நீட்டிக்கப்படும் என்று வதந்திகள் பரவுவதை மத்திய அரசு மறுத்துள்ளது.

நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ளது; இதுவடை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் புனேயில் உள்ள ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டுமே கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் செய்யும் வசதிகள் இருந்தது. ஆனால், தற்போது நாடு முழுவதும் 118 ஆய்வகங்களில் நாளுக்கு 15,000 மாதிரிகளைப் பரிசோதிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த விளக்கம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

#இந்தியா #கொவிட்-19 #கொரோனா #உத்தரப்பிரதேசம் #கிருமிநாசினி

குறிப்புச் சொற்கள்