திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 2வது கிருமித்தொற்று உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 68 வயது முன்னாள் போலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த 68 வயதான அப்துல் அஜீஸ் என மாண்டவரின் அடையாளம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கொச்சி அருகே சுல்லிக்கல் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தார். அதுதான் அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதல் கொரோனா மரணம்.
கேரள மாநிலத்தில் இதுவரை 213 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை ஒரே நாளில் 32 பேருக்கு கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கேரளாவில் வயதான தம்பதி கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டயத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாமஸ் (93), மரியம்மா(88) ஆகியோர் அவர்கள். அதே சமயம் இவர்களுக்கு சிகிச் சையில் உதவிய தாதிக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களோடு தொடர்பிலிருந்த குடும்ப உறுப்பினர்களான இத்தாலியிலிருந்து திரும்பிய இவர்களின் மகன், மருமகள், பேரன், பேத்திகள் ஆகியோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருந்தனர். அவர்களும் குணமடைந்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் 1,57,253 பேர் மருத்துவக் கண்காணிப்பின்கீழ் இருப்பதாகவும் 623 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

