வயநாடு: இந்திய வனத் துறை அதிகாரி சுதா ராமன் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். ஊரடங்கால் அமைதியாக இருக்கும் சாலையில் யானை ஒன்று எந்தவித சலனமும் இல்லாமல் நடந்து செல்வது அந்த காணொளியில் தெரிகிறது.
கேரள மாநிலம் வயநாடு அருகே எடுக்கப்பட்ட இந்த காணொளியில், நடந்து சென்ற யானை சிறிது தூரம் வந்து கடைகளை சுற்றும் முற்றும் மேற்பார்வையிடுவது போல பார்க்கிறது. பின்னர் மீண்டும் நடந்து செல்கிறது.
அதனை சுதாராமன், "ஊரடங்கு உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வையிடும் யானை," என வேடிக்கையாகக் குறிப்பிட்டு உள்ளார். இக்காணொளியை ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அண்மையில் இதேபோன்ற காணொளி ஒன்று வெளியானது, ஹரித்துவாரில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் யானை ஒன்று வேகமாக நடந்து சென்றது.
மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி யானைகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதாகக் கூறப்படுகிறது. அதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை.

