இரு இந்தியாக்கள்: கபில்சிபல் கவலை

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று உலகத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த கொரோனா சூழலைத் தாக்குப் பிடிக்காமல் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகள் தடுமாறி வருகின்றன. இப்போதுதான் அந்த நாடுகள் தங்களது இயலாமை குறித்து புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்று பேசப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவும் தன்னிடம் உள்ள இரண்டு இந்தியாக்களை காட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்குப் பிறகு இரு வேறுபட்ட இந்தியாவைக் காணமுடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கூறியுள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “ஓர் இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; தொலைக்காட்சியில் ராமாயணம் பார்க்கிறது, பாட்டுப்போட்டி நடத்துகிறது.

மற்றோர் இந்தியா வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி, வாழ்வுக்காக போராடுகிறது,” என்று கபில் சிபல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மத்திய அமைச்சர்கள் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரைப் பார்த்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி யோகா செய்ததையும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்ததையும், ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பாட்டுப்போட்டி நடத்தியது உள்ளிட்டவற்றைத்தான் திரு கபில் சிபில் மறைமுகமாக இந்த டுவீட் மூலம் விமர்சித்துள்ளார் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.