புதுடெல்லி: இந்தியாவில் நேற்றுக் காலை 9 மணி நிலவரப்படி கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,067ஆகவும் உயர்ந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 490 பேரைக் கிருமி தொற்றியதாக அமைச்சு கூறியது. இதுவரை 291 பேர் கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனர்.
இந்தியாவில் மொத்தமுள்ள 36 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30ல் கிருமித்தொற்றும் மரணங்களும் பதிவாகி உள்ளன. அவற்றில் ஆக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை 690 பேரைக் கிருமி தொற்றிவிட்டது. தமிழ்நாடு (571) இரண்டாம் இடத்திலும் டெல்லி (503) மூன்றாமிடத்திலும் உள்ளன.
உயிரிழப்பிலும் மகாராஷ்டிர மாநிலமே முதலிடத்தில் உள்ளது. கிருமித்தொற்றால் அங்கு இதுவரை 45 பேர் பலியாகிவிட்டனர். குஜராத்தில் 11 பேரும் மத்தியப் பிரதேத்தில் ஒன்பது பேரும் டெல்லி, தெலுங்கானாவில் தலா எழுவரும் பஞ்சாபில் அறுவரும் உயிரிழந்தனர். தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் தலா ஐவர் மாண்டுவிட்டனர்.
டெல்லியில் இடம்பெற்ற சமய நிகழ்வில் பங்கேற்றவர்களில் மட்டும் ஆயிரம் பேருக்குமேல் கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், அதில் பங்கேற்ற கிட்டத்தட்ட 25,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்போதைக்கு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின்கீழ் அரசாங்க மருத்துவ ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 10,000 பேருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் மூன்று நாட்களில் 20,000ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

