சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டு மக்கள் வீட்டில் அகல் விளக்குகளை ஏற்றினர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஒருசிலர் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தபோது திடீர் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நடிகர் ரஜினி உட்பட பல பிரபலங்களும் வீடுகளில் ஒளியேற்றி, அது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை, எண்ணூர் பகுதியில் சிலர் பட்டாசுகள் வெடித்தனர். இதில் ராக்கெட் பட்டாசு ஒன்று காலி இடத்தில் விழுந்து தீப்பற்றியது. அப்பகுதியில் காய்ந்துபோன மரத்துண்டுகள், பொருட்கள் அதிகமிருந்ததால் தீ மளமளவென பரவி பெரிதானது. பொதுமக்கள் ஏதோ விபரீதம் நிகழ்ந்ததாகக் கருதி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

