இந்தியா - கொவிட்19 செய்திக்கொத்து

2 mins read
12c77823-fa5e-4914-a27d-f2155de03937
புதுடெல்லியில் வெளி மாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர். படம்: இபிஏ -

ஒடிசாவில் முதல் கொரோனா கிருமி தொற்று சிகிச்சை மருத்துவமனை துவக்கம்

புவனேஸ்வர்: இந்தியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முதல் மருத்துவமனை ஒடிசா மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் 1,000 படுக்கை களுடன் கூடிய மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. இதற்கிைடயே, முதல்கட்டமாக 5,000 ரயில் பெட்டிகளை தனிமை வாா்டுகளாக மாற்றும் பணிகள் நடந்து வரு கின்றன. இதுவரை 2,500 ரயில் பெட்டிகள் தனிமை வாா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமாா் 40,000 பேருக்கான படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுபாட்டில் கடத்தியவர் கைது

புது­டெல்லி: கொரோனா கிருமியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்கள் மதுவுக்கு மாற்றாக வேறு சிலவற்றை குடித்து தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த பாபி சவுத்ரி என்ற பால்காரர் தன்னுடைய உறவினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்திற்காக மதுபாட்டில்களை பால் கேனுக்குள் கடத்திச்சென்றுள்ளார். சந்தேகமடைந்த போலிசார் பாபியின் பால்கேனைச் சோதனை செய்தபோது அதில் 7 மதுபாட்டில்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். பாபியும் கைது செய்யப்பட்டார்.

நிதி பெற மறுப்பதாக காம்பீர் புகார்

புது­டெல்லி: கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாஜக எம்பி கவுதம் காம்பீர் ரூ.1 கோடி பணத்தை ஒதுக்கிய நிலையில், "தற்போதைய தேவை பாதுகாப்பு உபகரணங்கள் தானே தவிர, பணமல்ல," என டெல்லி முதல்வர் அரவிந்த் கெ​ஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனது தொகுதி நிதியைப் பயன்படுத்த மறுப்பதாக காம்பீர் குற்றம் சாட்டினார். "மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உதவினால் மிகவும் நலமாக இருக்கும்," என்றார் கெ​ஜ்ரிவால்.

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்

புவனேஷ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருதா குலங்கே, "வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் முகக்கவசமோ, கைக்குட்டை அல்லது 'ஸ்கார்ப்' மூலம் முகத்தை மறைக்காமல் நகரப்பகுதியில் நடமாடினால் ரூ.1,000, கிராமப்புறம் என்றால் ரூ.500 பணம் அபராதமாக செலுத்தவேண்டும்," என்றார்.