புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியானோரில் பெரும்பாலானோர் சராசரியாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், மாண்டோரில் பலருக்கும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் இவ்வாரம் திங்கட்கிழமை நிலவரத்தின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அன்றைய நிலவரப்படி இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,097 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆகவும் இருந்தன. அவர்களில் 1,911 பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் என்றபோதிலும் அந்த வயதினரில் மாண்டோர் எண்ணிக்கை 8 மட்டுமே. இதன் விகிதம் 0.4%.
அதே நேரம் 60 வயதுக்கு மேற்பட்ட 773 பேருக்குக் கிருமி தொற்றியதில் உயிரிழந்த முதியோரின் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. இந்த மரண விகிதம் 8.9%. ஆக இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரில் இந்த விகிதமே அதிகம்.
மேலும், உயிரிழந்தோரில் 86 பேருக்கு கிருமித்தொற்று தவிர வேறு பல உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன. அவர்களில் 56 விழுக்காட்டினருக்கு நீரிழிவும் 47 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் இந்த உயிரிழப்பு நிலவரம் இதர நாடுகளோடு மாறுபட்டு உள்ளது. உதாரணமாக, சீனாவில் கொரோனா கிருமியால் உயிரிழந்த பலருக்கும் இதயக் கோளாறுகளும் நுரையீரல் பிரச்சினைகளும் இருந்தன.
அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். 76 விழுக்காட்டினர் ஆண்கள், 24 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். அதேபோல இறந்தவர்களிலும் 73 விழுக்காட்டினர் ஆண்கள், 27 விழுக்காட்டினர் பெண்கள்.

