தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 9) மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு இன்று கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"இதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது," எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று மாலை 5 மணி நிலவரப்படி இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,218. கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169.
477 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அங்கு ஊரடங்கை நீட்டிக்க பல மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

