சென்னை: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,961 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 540 பேருக்கு நோய் தொற்றியதாகவும் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 473 பேர் உரிய சிகிச்சைக்குப் பிறகு கொரோனா கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
புதன்கிழமை மட்டும் மகாராஷ்டிராவில் 8 பேரும் குஜராத்தில் 3 பேரும் ஜம்மு காஷ்மீரில் இருவரும் பஞ்சாப் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழகத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 5,734 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அங்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 16, மத்தியப்பிரதேசத்தில் 13, டெல்லியில் 9, பஞ்சாப், தமிழகத்தில் தலா 8 பேர், தெலுங்கானாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 5 பேரும் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் நால்வரும் பலியாகி உள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,135 பேருக்கு 'கொவிட் 19' நோய் தாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.

