பெங்களூரு: கர்நாடகாவில் 181 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 6 பேர் இந்தப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அம்மாநில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அங்கு நேற்று அதிகாலை 1 மணி அளவில் 80 வயதுப் பெண்மணி கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்மணிக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கடந்த 6ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
இவ்விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா கவனம் செலுத்தவேண்டும் என்றார் சித்தராமையா.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவு குறித்து மாநிலங்களே முடிவெடுக்க பிரதமர் மோடி அனுமதித்தால் கர்நாடகாவில் கொரோனா கிருமி பாதிப்பில்லாத மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சென்றுவர மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார் அவர். மேலும், கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் ஊரடங்கைத் திரும்பப் பெற்றால் பெரிய அளவில் கிருமித்தொற்றுப் பரவல் ஏற்படும் என்றும் அதன் விளைவுகளை கற்பனை செய்து கூடப் பார்க்க இயலாது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

