புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வாளர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இம்மாத்திரை உரிய பலனைத் தரவில்லை என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
'கொவிட் 19' நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை அளிக்கலாம் என அமெரிக்க மருத்துவக் கழகம் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து இந்தியாவிடமிருந்து 3 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா வாங்கிக் குவித்துள்ளது.
இதேபோல் வேறு சில நாடுகளும் மாத்திரையைத் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை எதிர்பார்த்த பலனை தரவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த மாத்திரையைப் பரிந்துரைக்கப் போவதில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கழகம் விரைவில் தெளிவுபடுத்தும் எனத் தெரிகிறது.

