திருவனந்தபுரம்: 'கொவிட் 19' நோயாளிகளைக் குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பின்பற்ற கேரள அரசு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
கொரோனா கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து குறிப்பிட்ட அணுக்களைப் பிரித்தெடுத்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்கள் அடையாளம் காணப்படும். பின்னர் அந்த அணுக்கள் நொய்த்தொற்று உள்ளவர்களின் உடலில் செலுத்தப்படும். இதை பிளாஸ்மா சிகிச்சை முறை என்று குறிப்பிடுகிறார்கள்.
இச்சிகிச்சை முறைக்கு நல்ல பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.
அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் இந்த சிகிச்சை முறை குறித்து ஆராய்ந்து வருகின்றன. எபோலா, சார்ஸ், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறைதான் கைகொடுத்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் கேரளாவுக்கு இச்சிகிச்சை முறையைப் பின்பற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

