பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கிருமித்தொற்று
பாட்னா: பீகாரில் 60 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 23 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த மாதம் ஓமானிலிருந்து பீகார் திரும்பிய நபரால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 4 ஆம் தேதி தெரியவந்தது அதற்கு முன் அவர் தமது உறவினர்கள் பலரைச் சந்தித்துவிட்டார். அவரது உறவினர்கள் 22 பேருக்கும் அவரது கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் ஆலோசனை: ஆளுநர் மீது சிவசேனா அதிருப்தி
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக இந்த வாரத் தொடக்கத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஆணையர்கள் ஆகியோருடன் காணொளி அழைப்பு மூலம் ஆலோசனை நடத்தினார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. நெருக்கடிநிலையின்போது அரசு நிர்வாகத்துக்கு வழிமுறைகளை வழங்குவதற்கு ஒரே ஒரு அதிகார மையம் தான் இருக்க வேண்டும் என்றும் மத்தியில் பிரதமருக்கும் மாநிலத்தில் முதல்வருக்கும்தான் அந்த அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் சிவசேனா கூறியது.
கட்டுப்பாட்டு அறைக்கு வரும் நியாயமற்ற கோரிக்கைகள்
பெங்களூரு: இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள முடக்கநிலையின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி வெளிவருவோருக்கு பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் அவர்கள் 100 எனும் தொலைபேசி எண் மூலம் போலிஸ் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சலுகையை பொதுமக்களில் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். உறவினர்களின் வீட்டிற்குத் தங்களை அழைத்துச் செல்லும்படியும் சந்தையில் இருக்கும்போது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டால் தம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் போலிஸ் வாகனத்தைச் சிவர் கேட்கின்றனர்.

