போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள ஜே.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் சச்சின் நாயக் கொரோனா கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியத்தை மனதில் கொண்டு தமது மனைவியையும் 3 வயது பெண்குழந்தையையும் பார்க்காமல் தமது காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலே உறங்கி வந்தார். இது கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. தன் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிக்கொள்வார்.
மருத்துவரின் நிலையை அறிந்த மருத்துவமனை தலைமை, அவர் தங்குவதற்கு போபாலில் ஹோட்டல் அறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
இந்நிலையில் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை, மருத்துவ பணிவிடை செய்து வரும் சுகாதாரப் பணியாளர்கள்தான் உண்மையான தேச பக்தர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

