இண்டிகோ விமான நிறுவன ஊழியர் சென்னையில் கொரோனாவால் மரணம்

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் சென்னையில் கொரோனாவால் மரணம்

2 mins read
24a3342d-44c2-44c7-8f19-1835173341d2
ஐம்பது வயதை கடந்த அவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் இண்டிகோ நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் சென்னையில் பணி அமர்த்தப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தனது ஊழியர் ஒருவர் சென்னையில் உயிரிழந்ததாக பிரபல விமானசேவை நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது.

இறந்தவர் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அந்த ஊழியர் இண்டிகோ நிறுவனத்தில் விமான பராமரிப்பு பொறியாளராக பணியாற்றியவர் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் இண்டிகோ தெரிவித்தது.

ஐம்பது வயதை கடந்த அவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் இண்டிகோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் சென்னையில் பணி அமர்த்தப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்று காரணமாக விமானப் பணியாளர் இறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கிருமி பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. புளியந்தோப்பை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலியான என அண்மைய தகவலில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளது; 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்திய அளவில் கிருமித்தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முதலாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,895 ஆக உள்ள நிலையில் அங்கு 200க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மும்பையின் குடிசைப்பகுதியான தாராவியில் மேலும் 43 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு இதுவரை நால்வர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், தாராவியில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்