புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா ஆகிவிட்டது. அதே வேளையில், பாதிப்புகள் இருக்கும் போதிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் பாராட்டைப் பெற்றுவருகிறது.
மனிதாபிமான அடிப்படையில் மலேரியா மாத்திரைகளை அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பிவருகிறது.
கொரோனா காரணமாக பல நாடுகள், வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் தங்கள் மக்களைக் கூடுமானவரையில் மீட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையை ஒட்டி ஆஸ்திரேலியா இந்தியாவில் இருந்து தன் நாட்டினர் 444 பேரை தனி விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து மெல்பர்ன் நகருக்குக் கொண்டு சென்றது.
அதேபோல் அமெரிக்காவும் சிறப்பு விமானச் சேவைகளை அறிவித்தது. 50,000 அமெரிக்கர்கள் அமெரிக்கா திரும்பி இருக்கிறார்கள் என்று அந்த நாட்டின் அதிபர் தெரிவித்தார்.
இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல விரும்பாமல் இந்தியாவிலேயே தங்கி இருக்க விரும்புவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அமெரிக்கர்களைப் போலவே இதர நாட்டினர் பலரும் இவ்வாறே விரும்புவதாகத் தெரிகிறது.
இந்தியாவில் இன்னமும் 24,000 அமெரிக்கர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் தொடர்புகொள்ள தாங்கள் முயன்று வருவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரி இவான் புரவுன்லி தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

