மங்களூரு: கொரோனா கிருமி தொற்றிவிடும் என்ற பயத்தில் யாரும் யாரையும் வீடுகளில் அனுமதிப்பதில்லை.
கர்நாடக மாநிலத்தில் மங்களூரு நகரில் இருக்கும் பல அடுக்குமாடி புளோக்குகளும் வெளியில் இருந்து வரும் மற்றவர்களுக்குத் தங்கள் கதவுகளை இழுத்து மூடிவிட்டன.
இந்நிலையில், அந்த நகரில் இருக்கும் ஒரு புளோக்கில் உள்ள ஒரு வீட்டில் மாணவர் ஒருவர் தங்கி இருந்து படித்து வருகிறார். அந்த மாணவரின் நண்பர் ஒருவர் விடுதியில் தங்கி இருந்தார்.
விடுதி மூடப்பட்டுவிட்டதால் அங்கு இருந்த மாணவர்கள் முன்னதாகவே பல இடங்களுக்கும் சென்றுவிட்டனர்.
ஒருவர் மட்டும் தங்க இடமின்றி தவித்தார். தன் நெருங்கிய நண்பரான அந்த மாணவரை தன் அடுக்குமாடி வீட்டில் தன்னுடன் தங்கவைத்துக்கொள்ளலாம் என்று முதல் மாணவர் முடிவு செய்தார்.
ஆனால் அதற்கு புளோக்கில் குடியிருக்கும் மற்ற வீட்டினர் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டனர்.
அதன்படி ஒரு பெட்டியில் தன் நண்பரை அடைத்துவைத்து பெட்டியை இழுத்துக்கொண்டும் தூக்கிக் கொண்டும் மாணவர் தன் புளோக்கை அடைந்தார். புளோக் வளாகத்துக்குள் நுழைந்தபோது பல வீட்டுக்காரர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு காவலரிடம் சொல்லி மாணவரை உள்ளே விடக்கூடாது என்று மறுத்துவிட்டனர்.
காவலர் உதவியுடன் பெட்டியைத் திறந்துபார்த்தபோது உள்ளே ஒருவர் இருந்ததைக் கண்டு திடுக்கிட்ட புளோக் வாசிகள், உடனே போலிசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டனர். விரைந்து வந்த போலிஸ் பெட்டியில் பதுங்கி இருந்தவரை பிடித்துச் சென்றது.
அவருக்கு இடம் கொடுக்க முயன்ற மாணவரை எச்சரித்துவிட்டு போலிசார் சென்றதாகவும் யார் மீதும் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

