புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 25 மாவட்டங்களில் மட்டும் கடந்த இரு வாரங்களில் யாருக்கும் புதிதாக கிருமித் தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால், 15 மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட அந்த 25 மாவட்டங்களில் முன்னதாகவே துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் நோய்த்தொற்று பரவவில்லை என்றார்.
இது ஒரு நல்ல செய்தி என்றும் லவ் அகர்வால் குறிப்பிட்டார்.
"அடுத்த ஆறு வாரங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துக் கருவிகளும் நம்மிடம் தயாராக உள்ளன. எனவே, இவ்விஷயத்தில் நாம் கவலைப்படத் தேவையில்லை.
"மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா, புதுச்சேரியில் உள்ள மாஹே, பீகாரின் பாட்னா, நலந்தா, முங்கர், கேரளாவின் கோட்டயம், வயநாடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நீடிக்கும்," என்று லவ் அகர்வால் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானியும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே. சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த 20 ஆண்டுகளாகவே சிக்குன் குனியா, டெங்கி போன்ற பல்வேறு கிருமித் தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ளது.
"இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையானது நல்ல பலன் தந்துள்ளது," என்றார் சரஸ்வத்.

