கொவிட்-19:கேரளா, ஆந்திரா, பாட்னா, உ.பி., பீகார்

கொவிட்-19:கேரளா, ஆந்திரா, பாட்னா, உ.பி., பீகார்

3 mins read
edfafd8b-71e3-4910-855d-c18c4c973776
புதுடெல்லியில் உள்ள வெளிமாநில தொழிலாளிகள் தங்களுக்கு அளிக்கப்படும் உணவைப் பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனர். படம்: இபிஏ -

குழந்தை பிறந்த 25 நாட்களில் பணிக்கு திரும்பிய பெண் அதிகாரி

அமராவதி: குழந்தை பிறந்த 25 நாட்களில் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான கும்மல ஸ்ரீஜனா. ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு மார்ச் 5ஆம் தேதி குழந்தை பிறந்தது. 6 மாத பிரசவ கால விடுப்பு உள்ள போதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தனது விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பி உள்ளார் ஸ்ரீஜனா. மேலும் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் துரிதகதியில் மேற்கொண்டு வரும் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததாக அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். எனினும் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதில் கவனம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார். "கடுமையான தனிமைப்படுத்துதல், துல்லியமான தொடர்பு கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் முறை ஆகியவற்றை செயல்படுத்தி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி உள்ளோம்," என்றார் அமைச்சர் சைலஜா.

எமனைப் போல் வேடமிட்டு விழிப்புணர்வுப் பிரசாரம்

லக்னோ: எமதர்ம ராஜாவைப் போன்று வேடமணிந்து உத்தரபிரதேச காவல்துறையினர் கொரோனா கிருமி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அம்மாநிலத்தின் சில பகுதிகளில் மக்கள் ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வெளியே சுற்றுகின்றனர். இந்நிலையில் லவகுச மிஸ்ரா என்பவர் எமனைப் போல் வேடமணிந்து ஒலிபெருக்கியில் கொரோனா கிருமித் தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்தவாறு சாலைகளில் வலம் வருகிறார். அப்போது அவர் பொதுமக்களுக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார். "நான்தான் எமதர்ம ராஜன். நானே கொரோனா கிருமி. விதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் இந்தப் பூமியில் மனிதர்களே இருக்க மாட்டார்கள் அலட்சியமாகச் செயல்பட்டால் உங்கள் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்வேன்," என்று லவகுச மிஸ்ரா ஒலிபெருக்கியில் தொடர்ந்து பேசியபடி வலம் வருகிறார்.

வெளியூரிலிருந்து வருபவர்களை ஊருக்குள் விடாத பொதுமக்கள்

லக்னோ: வெளி மாநிலங்கள், நகரங்களில் இருந்து திரும்பும் குடும்ப உறுப்பினர்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தினர் ஊருக்குள் அனுமதிப்பதில்லை. வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி ஊர் திரும்பியுள்ளனர். எனினும் அவர்கள் ஊருக்குள் நுழையவோ மக்களைச் சந்திக்கவோ கூடாது என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கிராமத்தினரும் இவற்றை முறையாகப் பின்பற்றுகின்றனர். இதனால் ஊர் திரும்பும் தொழிலாளர்கள் எவ்வளவு நெருக்கமான உறவினராக இருந்தாலும், அவர்கள் அனைவருமே கிராமத்திற்கு வெளியே உள்ள பள்ளிகள் அல்லது பண்ணைகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

உணவு, முகக்கவசம், கிருமி நாசினி தயாரிக்கும் கைதிகள்

பாட்னா: சிறைக் கைதிகள் 400 பேரை வெளி மாநிலத் தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்குத் தினந்தோறும் உணவு சமைக்கும் பணியில் ராஜஸ்தான் சிறைத்துறை ஈடுபடுத்தி உள்ளது. வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு சப்பாத்தி, பருப்பு, காய்கறி கூட்டு ஆகியவை தினந்தோறும் தயாரிக்கப்படுகின்றன. கைதிகள் முகக்கவசம், கிருமி நாசினி தயாரிப்பிலும்கூட ஈடுபடுத்தப்படுவதாக ராஜஸ்தான் சிறைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 1.25 லட்சம் முகக்கவசங்களும் 4 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியும் கைதிகளால் தயாரிக்கப்பட்டுள்ளன.