சென்னையில் பெண்களை விட ஆண்களே அதிக அளவு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, "சென்னையில் இதுவரை 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ராயபுரம் மண்டலத்தில் அதிகமாக 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"கொரோனா பாதித்தோரில் ஆண்கள் 68.78% என்றும் பெண்கள் 31.22% என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கொரோனாவால் 30 முதல் 39 வயது வரையிலான 44 பேரும் 50 முதல் 59 வயது வரையிலான 39 பேரும் 60 முதல் 69 வயது வரையிலான 21 பேரும் 70 முதல் 79 வயது வரையிலான 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களின்படி, கொரானா வால் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேர் வெளிநாட்டினர்.
மருத்துவ சிகிச்சையில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,306 பேர் குணமடைந்துள்ளதாகவும் மேலும் 9,756 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மராட்டியம் முதலிடத்திலும் டெல்லி 2 ஆம் இடத்திலும் தமிழ்நாடு 3 ஆம் இடத்திலும் உள்ளன.

