இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,489 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிரிவில் மொத்தம் 170 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சின் செயலாளர் பிரீத்தி சுதன் தெரிவித்துள்ளார்.
"207 மாவட்டங்களில் மிதமான பாதிப்பு காணப்படு கிறது. இவை வெள்ளை நிறத்தில் குறிப்பிடும். கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன," என்று பிரீத்தி சுதன் மேலும் கூறியுள்ளார்.
இப்போது அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 14 நாட்கள் எந்த புதிய கிருமித் தொற்றும் ஏற்படாவிட்டால் ஆரஞ்சு நிற மண்டலமாகவும், அடுத்த 14 நாட்களில் புதிதாக தொற்று ஏற்படாவிட்டால் பச்சை மண்டலமாகவும் மாற்றப்படும்.

