ஊரடங்கு: உடல்நலம் குன்றிய, நடக்க முடியாத தந்தையை 1கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மகன்

ஊரடங்கு: உடல்நலம் குன்றிய, நடக்க முடியாத தந்தையை 1கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற மகன்

2 mins read
29135ca9-3266-4c3c-870f-bdc5f7e88952
நடக்க முடியாத நிலையில் இருந்த தமது 65 வயது தந்தையை ஆடவர் ஒருவர் தூக்கிச் சுமந்தபடி ஒரு கிலோமீட்டர் வரை சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. படம்: இணையம், காணொளி: சமூக ஊடகம் -

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நடக்க முடியாத நிலையில் இருந்த தமது 65 வயது தந்தையை ஆடவர் ஒருவர் தூக்கிச் சுமந்தபடி ஒரு கிலோமீட்டர் வரை சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை முடிந்து நேற்று அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மருத்துவமனை அனுமதி அளித்தது. அங்கிருந்து அவரை ஆட்டோ ஒன்றில் வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது மகன்.

ஆனால், வீட்டுக்கு வந்து சேருவதற்கு சுமர் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில் போலிசார் அந்த ஆட்டோவைத் தடுத்து நிறுத்தினர்.

ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக அந்த இடம் வரை மட்டுமே ஆட்டோ செல்ல அனுமதிக்கப்படும் என கூறினர்.

இதனையடுத்து வேறு வழியில்லாததால், நடக்க முடியாத நிலையில் இருந்த தந்தையை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார்.

அப்போது அவரது தாயாரும் நடந்தே உடன் சென்றார். இதனைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டாலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வதற்கு ஆட்டோவை அனுமதித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்