புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 எனும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 37 பேர் உயிரிழக்க, மரணம் அடைந்தோர் எண்ணிக்கையும் 414ஆக உயர்ந்தது.
ஆக அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு மட்டும் இதுவரை 3,398 பேரைக் கிருமி தொற்றிவிட்டது. அவர்களில் 187 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 1,650 பேரும் தமிழகத்தில் 1,374 பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கிருமித்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கேரள மாநிலம் முன்னணியில் இருக்கிறது. அங்கு இதுவரை 609 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 218 பேர் குணமடைந்துவிட்டனர். நேற்று முன்தினம் புதிதாக ஒருவரை மட்டுமே கிருமி தொற்றியது.
இதனிடையே, கொரோனா கிருமி பரவாமல் கட்டுப்படுத்த வேண்டுமெனில் சோதனைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்த வேண்டும் என்று இந்திய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் சேகரித்த தரவுகளின்படி, நேற்று முன்தினம் வரை 244,893 பேருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருக்கும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுவரை 30,000த்திற்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ள அமெரிக்காவில் இதுவரை 3,100,387 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு, சோதனைகள் குறித்த தரவுகளைத் திரட்டிவரும் 'வோர்ல்டோமீட்டர்ஸ். இன்ஃபோ' இணையத்தளம் தெரிவித்துள்ளது. அதாவது, அங்கு ஒரு மில்லியன் பேருக்கு 9,387 என்ற விகிதத்தில் கிருமித்தொற்றுச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மாறாக, இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு 177 சோதனைகளே நடத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, இந்தியாவிற்குக் கைகொடுக்கும் நோக்கில் 650,000 பரிசோதனைக் கருவிகள் ஏற்றப் பட்ட விமானம் நேற்றுக் காலை குவோங்சோ விமான நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டதாக சீனாவிற்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

