கும்பகோணம் அருகே உள்ளது தியாகசமுத்திரம் என்னும் கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவிற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் கிடா வெட்டிக் கொண்டாட நினைத்தனர்.
அதன்படி மற்ற இளைஞர்களுக்கும் தகவல் கூறியதுடன் நேற்று (ஏப்ரல் 16) கிராமத்தின் திறந்தவெளியில் கிடா வெட்டி சமைத்தனர்.
இதையறிந்த பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்த இடத்தில் திரண்டனர்.
தலைவாழை இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீளமாக வைத்து சோறு பரிமாறியபோது ஒருவர் கறிக் குழம்பை ஊற்றிக்கொண்டே வர 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் நெருக் கமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
இதை இளைஞர் ஒருவர், `எங்க ஊரில் கொரோனா கொண்டாட்டம் நடைபெறுகிறது' என தலைப்பிட்டு ஃபேஸ்புக்கில் காணொளியாக நேரலையில் வெளியிட்டார்.
அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து கபிஸ்தலம் போலிசார் சிவகுரு, 29, என்பவரைக் கைது செய்தனர்.
மேலும் சக்திவேல்,சங்கர், மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகுருவிடம் போலிசார் விசாரித்தபோது, "சும்மா ஜாலிக்காகச் செய்தோம்," எனக் கூறியதாகத் தெரிகிறது.
அரசின் உத்தரவை மதிக்காமல், கொரோனாவின் அபாயத்தையும் உணராமல் இளையர்கள் இவ்வாறு நடந்துகொண்டது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

