சென்னை வந்த 24,000 பரிசோதனைக் கருவிகள்; இருப்பினும் சிக்கல் தீரவில்லை

சென்னை வந்த 24,000 பரிசோதனைக் கருவிகள்; இருப்பினும் சிக்கல் தீரவில்லை

2 mins read
94120159-4b3b-4e63-9034-e1743a118bda
400,000 ஆர்டர் கொடுக்கப்பட்டதற்கும் வந்துள்ள உபகரணங்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம் இருப்பதால் வேகமாக பரிசோதனைகள் செய்யப்படுவதில் சிக்கல் எழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. படம்: இணையம் -

இந்தியாவின் கொரோனா கிருமித்தொற்றில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் 3வது இடத்தில் உள்ளது; மரண விழுக்காடு 1.91ஆக உள்ளது; 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசிடம் தேவையான அளவு முகக் கவசங்கள், என்-95 முகக்கவசங்கள், பிபிஇ கவச உடை, படுக்கைகள், பிசிஆர் கிட்கள் உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் வேகமாகப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதற்கு 'ராபிட் டெஸ்ட் கிட்' எனப்படும் விரைவு பரிசோதனை உபகரணங்கள் மூலம் ஆய்வு நடத்தப்படவேண்டும் என எதிர்க்கட்சிகள், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசிடம் அத்தகைய உபகரணங்கள் கையிருப்பில் இல்லை.

அதனால்400,000 உபகரணங்கள் வாங்க மத்திய அரசு மூலம் சீனாவிடம் அனுப்பாணை (ஆர்டர்) பிறப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ஆம் தேதி 1 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் வந்துவிடும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரவேண்டிய 'ராபிட் கிட்'மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 24,000 பரிசோதனை உபகரணங்கள் இன்று சென்னை வந்துள்ளதாகத் தெரிகிறது.

400,000 ஆர்டர் கொடுக்கப்பட்டதற்கும் வந்துள்ள உபகரணங்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம் இருப்பதால் வேகமாக பரிசோதனைகள் செய்யப்படுவதில் சிக்கல் எழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனைக் கூடங்கள் உள்ளன.

அங்கேயும் நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யமுடியும்.

விரைவாக பரிசோதனை செய்யக்கூடிய உபகரணங்கள் போதுமானதாக இல்லாததால் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்