புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பொருளியல் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த நாட்டின் மத்திய வங்கி இரண்டாவது முயற்சியாக ரூ. 50,000 கோடி கடன் ஏற்பாட்டை அறிவித்து இருக்கிறது.
அந்த ஏற்பாட்டின் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பலன் அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியா மே 3ஆம் தேதி வரை முடங்கி இருக்கிறது. அந்த நாட்டின் பொருளியல் எல்லா துறைகளிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்கள்.
அதனையடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ், நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பல விவரங்களைத் தெரிவித்து அறிவிப்புகளை விடுத்தார்.
பணப்புழக்கம் தாராளமாக இருப்பதை உறுதிப்படுத்த வங்கிகளுக்கு ரூ. 50,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியப் பொருளியல் இந்த ஆண்டு 1.9 விழுக்காடுதான் வளரும் என்று அனைத்துலக பண நிதியம் கணித்து உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜி20 நாடுகளிலேயே இந்த வளர்ச்சிதான் அதிகம் என்றார்.
என்றாலும் அடுத்த ஆண்டு பொருளியல் 7.4 விழுக்காடு வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், வங்கிகளிடம் இருந்து மத்திய வங்கி வாங்கும் பணத்திற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதம் 4%லிருந்து 3.75% ஆகக் குறைக்கப்படுவதாகவும் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளைச் சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கு 60% கூடுதலாக நிதி உதவி கிடைக்கும் என்ற சக்தி காந்ததாஸ் அதாவது அவசர தேவைகளுக்கு மத்திய வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்று விளக்கினார்.
இப்போதைய இக்கட்டான சூழலிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை மத்திய வங்கி உறுதி செய்துள்ளதாகக் கூறிய அவர், நாட்டுக்கு மிகப்பெரிய பொருளியல் சவால் காத்திருக்கிறது என்றும் நாட்டின் நிலையை மத்திய வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

