புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 கிருமித் தொற்று சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இந்தக் கொடுந்தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,000 நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500ஐ தாண்டியுள்ளது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்காத இடங்களில் 20ஆம் தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
மருத்துவ சேவைகள், வேளாண் மற்றும் தோட்டத் தொழில்கள், மீன்பிடித் தொழில், தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள் அதிகபட்சம் விழுக்காட்டு ஊழியர்களுடன் செயல்படலாம். நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
பொது விநியோகத்துறை, மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்து, இணையம் வழி கற்பித்தல் மற்றும் தொலைதூரக் கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், தனியார் நிறுவனங்கள், கட்டுமானத் தொழில்கள், அவசர மருத்துவத் தேவைக்காக வாகனங்கள் இயக்குவது, அரசு அலுவலகங்கள் செயல்படும். இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

