பெங்களூரு: கர்நாடகத்தில் இதுவரை 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 14 பேர் இந்நோய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுப்பது குறித்து அமைச்சர்களுடனும் உயர் அதிகாரிகளுடனும் முதல் அமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறினால் சட்டம் பாயும் என்றார். மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, தனி அதிகாரியை நியமித்து, அவருக்கு நீதிபதிக்குள்ள அதிகாரம் வழங்கப்படும் என்றார்.
அத்துடன் அவருக்கு உதவியாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். அந்தக் குழுவினர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அத்தகைய பகுதிகளில் ஊரடங்கை மேலும் தீவிரமாக அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வர அனுமதி கிடையாது. அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கப்படும். இந்தப் பணிகளை அந்தக் குழுவினர் மேற்கொள்வார்கள். கொரோனா பாதித்த பகுதியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் இன்று முதல் ஊரடங்கு சற்று தளர்த்தப்படும் என்றும் இருசக்கர வாகனங்களுக்கான தடை மட்டும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் சரக்கு வாகனங்கள், ஏற்கனவே பாஸ் பெற்றுள்ள கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
ஆனால் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செல்ல அனுமதி இல்லை.
தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். முடிந்தவரை அந்த நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உற்பத்தி தொழில் நிறுவனங்கள், நகரங்களில் தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி, பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், ராமநகர் மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக கருதப்படும். இதன் மூலம் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
கட்டுமானத் தொழில்கள் அனுமதிக்கப்படும். ஆனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதே இடத்தில் தங்க தேவையான வசதிகளை நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும். வேறு எந்த கடைகளோ அல்லது வணிக வளாகங்களோ திறக்க அனுமதி இல்லை. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்.
மூத்த குடிமக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது. வீட்டில் இருந்து வெளியே வரும் அனைவரும் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். எல்லா இடங்களிலும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.
"கர்நாடகாவில் மே மாதம் 3ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்," என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.

