புதுடெல்லி: மும்பை, இந்தூர், கோல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய நான்கு நகரங்களில் கொரோனா கிருமித் தொற்று மிகவும் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை தளர்த்துவது, வன்முறைகள் உள்ளிட்ட காரணங்களால் கிருமித்தொற்றுப் பரவல் அதிகரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாட்டின் சில பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. சமூக இடைவெளியை அறவே கடைபிடிக்காத சில பகுதிகளும் உள்ளன. பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
"நகரப்புறங்களில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்," என உள்துறை அமைச்சு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா கிருமித் ளதொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543ஆகவும் அதிகரித்துள்ளது.
'கொவிட்-19' நோய்த்தொற்று தீவிர நிலையை எட்டியிருப்பதாக கருதப்படும் நான்கு நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை மட்டுமல்லாமல் புனே நகரிலும் நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் 4,203 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 223 பேர் பலியாகி உள்ளனர்.
ஜெய்ப்பூரை உள்ளடக்கிய ராஜஸ்தான் மாநிலத்தில் 1,478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 14ஆக உள்ளது.
கொரோனா கிருமித் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ள மேற்கு வங்க மாநிலத்தில், கோல்கத்தா மட்டுமல்லாமல் ஹவுரா, கிழக்கு மெடினிபூர், டார்ஜிலிங், கலிங்போங் உள்ளிட்ட மேலும் சில நகரங்களிலும் கிருமித் தொற்று தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தூர் நகரை உள்ளடக்கிய மத்திய பிரதேசத்தில் 1,407 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து கிருமித் தொற்று தீவிரமடைந்துள்ள நகரங்களில் உடனடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்கள் இந்த ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

