அமராவதி: ஆந்திராவில் ஊரடங்கின் போது பணியில் இருக்கும் காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தென்மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலிசாருக்கு லோகமணி என்ற ஒரு பெண்பணி குளிர்பானங்கள் வழங்கும் காணொளிப் பதிவு ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டது.
அந்த பெண்மணியிடம் போலிசார் பேசும் போது தனது மொத்த வருமானம் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் கிருமித் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் காவல்துறையினரை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுவது அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.
இதைக் கண்ட பலரும் அப்பெண்மணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மனிதாபிமானத்துடனும் சமூக பொறுப்புணர்வுடனும் லோகமணி செயல்பட்டுள்ளதாக பல முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர். இதே போன்று அனைவரும் நாட்டின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறை தலைவர் கவுதம் ஸ்வாங் நேற்று முன்தினம் லோகமணியை காணொளி அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு பாராட்டியதுடன் 'சல்யூட்' அடித்தும் தமது மரியாதையை பதிவு செய்தார்.
"உங்களைப் போன்ற மக்களை காப்பாற்றவே காவல்துறை இரவு பகலாக பாடுபடுகிறது. காணொளியில் உங்களது செயலைக் கண்டு நெகிழ்ந்து போனேன்," என்று கவுதம் ஸ்வாங் குறிப்பிட்டார்.
இதையடுத்து அவருடன் இருந்த மற்ற அதிகாரிகளும் லோகமணிக்கு 'சல்யூட்' அடித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
லோகமணி காவலர்களுக்கு குளிர்பானம் வழங்குவது நீடித்து வருகிறது.

