புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் நாடளாவிய முடக்கநிலை 27வது நாளைத் தொட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆக அண்மைய விவரங்களின்படி இந்தியா முழுவதும் பதிவாகி உள்ள கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை 18,601. மரணமடைந்தோர் எண்ணிக்கை 590. அதேநேரம் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3,251.
கிருமித்தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவது குறித்த ஒரு தகவலையும் அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்டது.
முன்னர் 3.4 நாட்களில் இரட்டிப்பாகி வந்த எண்ணிக்கை முடக்கம் நடப்புக்கு வந்த பிறகு 7.5 நாட்களில் இரட்டிப்பு கண்டு வருவதாக அது தெரிவித்தது.
இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று குறிப்பிட்ட மத்திய சுகாதார, குடும்ப விவகார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், 18 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த இரட்டிப்பு நிலையைக் காட்டிலும் முன்னேறுவதாகத் தெரிவித்தார்.
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சில விதிவிலக்குகளை அரசாங்கம் அறிவித்தபோதிலும் கிருமித்தொற்று அதிகம் பரவும் பகுதிகளுக்கு அந்த விதிவிலக்குகள் பொருந்தாது என்றும் அத்தகைய இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் குறிப்பிட்டது.

