சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்த சென்னை மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி தமது கணவரின் உடலை தங்கள் சமூக வழக்கப்படி அடக்கம் செய்ய உதவ வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கண்ணீர் மல்க வெளியிட்ட காணொளிப் பதிவில், சில காரணங்களுக்காக தமது கணவரின் உடல் சவப்பெட்டியில் வைத்து வேறொரு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்க கல்லறைக்குக் கொண்டு சென்றபோது எதிர்ப்புகள் எழுந்தன. உடலைப் புதைக்கவிடாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் அவரது மனைவி வெளியிட்ட காணொளிப் பதிவில் இரண்டு பிள்ளைகளுடன் விதவையாக நிற்கும் நிலையில், தமிழக முதல்வர் தமக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
"என் கணவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதற்கு முன்பு என்னிடமும் பிள்ளைகளிடமும் பேசினார். அப்போது, 'ஒருவேளை நான் திரும்பி வரவில்லை என்றால் நம் வழக்கப்படி அடக்கம் செய்யுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.
"எனது கணவரின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை அப்படியே எடுத்து எங்கள் வழக்கப்படி எங்கள் இடுகாட்டில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். இதனால் யாருக்கும் எவ்விதத் தொற்றும் பரவாது," என ஆனந்தி சைமன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

