புதுடெல்லி: கொவிட்-19 கிருமித்தொற்று விரைவுப் பரிசோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே ஒரு தென்கொரிய நிறுவனம் தயாரித்து வருகிறது.
'எஸ்டி பயோசென்சர் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்' என்ற அந்த நிறுவனத்தின் ஆலை ஹரியானா மாநிலம், மனேசரில் அமைந்துள்ளது. வாரத்திற்கு 500,000 விரைவுப் பரிசோதனைக் கருவிகளை அந்த ஆலை தயாரிக்கும்.
கடந்த 19ஆம் தேதி தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிய அந்த நிறுவனம் 25,000 பரிசோதனைக் கருவிகளை ஹரியானா மாநிலத்திற்கு வழங்கியிருக்கிறது.
தென்கொரியாவிற்கான இந்தியத் தூதர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் நேற்று முன்தினம் வடக்கு சுங்சியாங்கில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விரைவுப் பரிசோதனைக் கருவிகள் தயாரிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
தேவை அதிகமாக இருப்பதால் வரும் வாரங்களில் இன்னும் அதிகளவில் பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கப்படும் என்று டுவிட்டர் வாயிலாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விரைவுப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் 5.4% மட்டுமே துல்லியமாக உள்ளதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, இரு நாட்களுக்கு அந்தக் கருவிகளைக் கொண்டு சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொண்டது.

