கௌஹாத்தி: பசி, புயல், திருடர்கள் எனப் பல இன்னல்களுக்கு இடையே, நடந்தும் வழியில் கிடைத்த வாகனங்களில் தொற்றியும் கிட்டத்தட்ட 2,900 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து 26வது நாளில் ஊர் திரும்பினார் ஜாதவ் கோகோய் (படம்) என்ற இந்த ஆடவர்.
வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த திரு ஜாதவ், ஆறு மாதங்களுக்குமுன் வேலை தேடி குஜராத் சென்றார். கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு திரு ஜாதவையும் உலுக்கிவிட்டது.
"நான் குஜராத்திலேயே தங்கியிருந்தால் பட்டினியால் மாண்டுபோயிருப்பேன்," என்றார் திரு ஜாதவ். இவர் இப்போது அசாம் மாநிலம், நாகோனில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
திரு ஜாதவுடன் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் கடந்த மாதம் 25ஆம் தேதி குஜராத்தின் சண்டோலாவில் இருந்து புறப்பட்டனர். நடை, பேருந்து, சரக்கு வாகனப் பயணம் மூலமாக கடந்த 13ஆம் தேதி வாரணாசியைச் சென்றடைந்தனர்.
கைபேசி வைத்திராத திரு ஜாதவ், உடன் வந்த ஒருவரின் கைபேசி மூலம் தமது குடும்பத்தைத் தொடர்புகொண்டு, அடுத்ததாக பேருந்து மூலம் பீகார் சென்று, அங்கிருந்து நடந்தே ஊர் திரும்ப இருப்பதாகக் கூறினார். அங்கிருந்து கிட்டத்தட்ட 1,000 கி.மீ. தொலைவு என்பதால் அவரின் குடும்பத்தினர் பயந்துபோயினர். ஒருவழியாக இம்மாதம் 19ஆம் தேதி அவர் ஊர் திரும்பினார்.
"பசியும் குளிரும் வாட்டியது. வேறெதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இனிமேல் என் வாழ்க்கையில் அசாமைவிட்டு வேறு எங்கும் செல்லமாட்டேன்," என்றார் திரு ஜாதவ்.

