புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சில நூறு ரூபாய் விலையே ஆகும் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைக் கருவியை டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி டெல்லி) உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியைச் சோதித்துப் பார்த்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் அதனைத் தயாரித்து, சந்தைப்படுத்த ஒப்புதல் வழங்கிவிட்டது.
இதையடுத்து, பொருத்தமான தொழிலகப் பங்காளியை அடையாளம் காணும் பணியில் ஐஐடி தீவிரமாக இறங்கியுள்ளது. அது சாத்தியமானால், இவ்வாரத்திலேயே தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர்கள் திரு விவேகானந்தன் பெருமாள், திரு மனோஜ் மேனன், திரு ஜேம்ஸ் கோமெஸ், திரு பிஸ்வஜித் குண்டு ஆகியோர் உள்ளிட்ட பத்துப் பேர் கொண்ட குழு இந்த மலிவு விலைப் பரிசோதனைக் கருவியை உருவாக்கி இருக்கிறது.


